சவுதி கல்லறை தோட்டத்தில் குண்டு வெடித்தது; 3 பேர் காயம்

ரியாத், :சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயம் அடைந்தனர்.சவுதி அரேபியாவில் செங்கடல் பகுதியையொட்டி துறைமுக நகரமான ஜெத்தாவில் கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு முதல் உலக போரின்போது உயிரிழந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிலரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் முதலாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 102வது ஆண்டு விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஜெட்டாவில் கல்லறை தோட்டத்தில் அஞ்சலி செலுத்தும் சர்வதேச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விழா நடைபெற்று கொண்டிருந்தபோது கல்லறை தோட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்த அனைவரும் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன, எப்படி நிகழ்ந்தது என்பன குறித்த முழுமையான தகவல்களை சவுதி அரேபியா தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ், இங்கிலாந்து, கிரீஸ், இத்தாலி மற்றும் யு.எஸ். தூதரகங்கள் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், அப்பாவி மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் வெட்கக்கேடானவை, முற்றிலும் நியாயப்படுத்தப்படாமல் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: