டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே?... பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில்; கொரோனா வைரஸ் தாக்கத்தால் நவ. 30-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது. தற்போது வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்காத வகையில் தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என முதற்கட்ட அறிவிப்பு, பின்னர் விடுதிகள் திறக்கப்படும் என இரண்டாம் கட்ட அறிவிப்பும், தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது மாணவ, மாணவிகளுக்கு வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இதனால் மாணவ மாணவிகளிடம் இருந்து பொதுமக்களுக்கு கொரோனா பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே நவ.16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவானது இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள், கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும். பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும். பல நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருகிறது இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். அரசு தரப்பில்; தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பானது நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை நவ.20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: