டிசம்பர் 6-ல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரை ஓயப்போவதில்லை...!! எல்.முருகன் பேச்சு

ஓசூர்: தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்ட நிலையில் தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்தது. இருப்பினும் கடந்த 6 ஆம் தேதி வேல் யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தற்போது வரை பல்வேறு இடங்களில் தடையை மீறி யாத்திரையை மேற்கொண்டுவருகிறார். இதனால் எல். முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் ஏற்படும் பாதிப்பு இருப்பதால் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இதனிடையே வேல் யாத்திரையை பாஜக விளம்பரத்திற்காக நடத்துவதாகவும், இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் எந்த பலனும் இல்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இது அரசியல் யாத்திரை என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார். இந்நிலையில் ஒசூரில் நடைபெற்ற வேல்யாத்திரையின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது; டிசம்பர் 6-ல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரை ஓயப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

 மேலும் கந்தசஷ்டி கவசம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராகத்தான் வேல் யாத்திரை நடைபெறுகிறது என்றும், பிரச்சினைகளை தாண்டி பீனிக்ஸ் பறவையாக திருச்செந்தூர் சென்றடைவோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தடையை மீறி வேல் யாத்திரையில் ஈடுபட்டதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: