ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி தந்த ஸ்மார்ட்போன் உடைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை

அன்னூர்: ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த புதிய செல்போன் கீழே விழுந்து உடைந்த தால் அன்னூர் அருகே 8ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள ஒட்டகமண்டலம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (45). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜெயா (40). பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது மகன் லியோ (18), மகள் தாரணி (13). இதில் லியோ இன்ஜினியரிங் படித்து வருகிறார். தாரணி 8ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா கால பள்ளி விடுமுறையின்போது ஆன்லைன் வகுப்பிற்காக தாரணி தந்தையிடம் செல்போன் கேட்க, அவர் ரூ.15 ஆயிரம் மதிப்பில், தன் மகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தாரணி கைதவறி செல்போனை கீழே போட அது உடைந்தது. இதையறிந்து தாரணியின் தாய் அவரை திட்டியதாக தெரிகிறது. தந்தை, மாலை வீடு திரும்பும் போது, அவருக்கும் தகவல் தெரிந்து விடும். அவரும் திட்டுவார் என்ற அச்சத்தில் தாரணி இருந்துள்ளார். இந்நிலையில் 6ம் தேதி மதியமே தாரணி வீட்டிலிருந்து மாயமானார்.

பெற்றோர், மகள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாரணியின் தந்தை கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் தாரணியை தேடி வந்தனர். இந்நிலையில், 3 நாட்களுக்கு பிறகு கருப்புசாமி தோட்டத்தின் அருகில் பாழடைந்த கிணற்றில் தாரணியின் சடலம் மிதந்தது நேற்று மாலை தெரியவந்தது. தகவல் அறிந்த அன்னூர் போலீசார் மற்றும் அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அழுகிய நிலையில் இருந்த பள்ளி மாணவி தாரணியின் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தந்தைக்கு பயந்து தாரணி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Related Stories: