பாலமலையில் விதிமீறி ஜீப்பில் ஆபத்தான பயணம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மேட்டூர்: மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பாலமலை உள்ளது. பாலமலையில் 33 கிராமங்களில் 5 ஆயிரத்திற்கு அதிகமானோர் வசித்து வருகின்றனர். சுமார் 4 ஆயிரம் அடி உயர மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு செங்குத்தான மலைகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் மண்சாலை அமைக்கப்பட்டது. இந்த மண்சாலையில் டூவீலர்களில் சென்று வருவதே பெரும் சவாலாக உள்ளது. மிகக்குறுகிய வளைவு, சறுக்கும்பள்ளம் உள்ளதால், மழைக்காலங்களில் வாகனங்கள் வழுக்கும் அபாயமும் உள்ளது.

இந்த மண்சாலைகளில் தடுப்புச்சுவர் இல்லாததால், பாதசாரிகள் மட்டுமே சென்று வர முடியும். தற்போது இந்த சாலையில் டிரக்ஸ் ஜீப்களில் கிராவாசிகளை அதிகளவில் ஏற்றிக்கொண்டு நகரங்களுக்கு வந்து செல்கின்றனர். சுமார் 8 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த ஜீப்பில் 20க்கும் அதிகமானோர், ஜீப்பின் கூரையிலும் அமர்ந்து செல்கின்றனர். விதிகளை மீறி சுமைகளுடன் ஆட்களையும் ஏற்றி செல்லும் இந்த ஜீப்புகள் எதிர்பாராமல் கவிழ்ந்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தகுதி இல்லாத வாகனங்களில் ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர்கள் அபாயகரமான பாதையில் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட்டு பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலர்களும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: