13வது சீசன் சாம்பியன் யார்? மும்பை இந்தியன்சுடன் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் பலப்பரீட்சை

துபாய்: ஐபிஎல் தொடரின் 13வது சீசன் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று மோதுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து  மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்தான் மாறி, மாறி முதல் இடத்தை பிடித்தன. லீக் சுற்றின் முடிவிலும் இந்த அணிகள் தான் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்தன. இறுதிப் போட்டியிலும் அதே அணிகள் இன்று களம் காணுகின்றன. ஆரம்பம் முதலே இரு அணிகளும் நிலையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வந்துள்ளன.

அதே நேரத்தில் டெல்லியை விட மும்பை கூடுதல் பலம் கொண்ட அணி என்பதை மறுப்பதற்கில்லை. ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் மும்பை 15 முறையும், டெல்லி 12 முறையும் வெற்றி வாகை சூடியுள்ளன. கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில், மும்பை 7 ஆட்டங்களிலும், டெல்லி 3 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. நடப்புத் தொடரில் மோதிய 3 போட்டிகளிலும் மும்பைதான் அபார வெற்றி பெற்றுள்ளது.

கூடவே ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் மும்பை அணி இதுவரை 5 முறை விளையாடியுள்ளது. முதல்முறையாக 2010ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை 22 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்றது.

எஞ்சிய 2013, 2015, 2017, 2019 சீசன்களிலும் வெற்றி பெற்று அதிக முறை ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட அணி என்ற சாதனையை தனதாக்கி கொண்டுள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இப்போது 6வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 5வது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அவற்றில் 2 முறை 3வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் அதிகபட்ச சாதனை. இந்த முறைதான் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே இன்று இரவு துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை 5வது முறையாக சாம்பியனாகுமா இல்லை டெல்லி புதிய சாம்பியனாகுமா என்பது தெரியும்.

Related Stories: