தமிழகத்தில் பாஜ நடத்தும் வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு இல்லை: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: பாஜ தற்போது செய்து வரும் செயலுக்கு எங்கள் ஆதரவும் கிடையாது எதிர்ப்பும் கிடையாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் பாலகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிம் அவர் கூறியது:  அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜவின்  கடமை. அவர்கள் தற்போது  செய்து வரும் செயல் மக்களிடம் பாசிட்டிவாக போய் சேருகிறதா என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு எங்கள் ஆதரவும்  கிடையாது எதிர்ப்பும்  கிடையாது.

கொரோனா காலத்தில் நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுத்து வருகிறோம். பாஜக தற்போது மேற்கொண்டு வரும் செயல் மக்கள்  நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்  என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது. 100 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது செய்ய வேண்டும் என்பது தற்போது கொரோனா காலத்தில்  உள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அதைத்தான் தற்போது நாங்கள் செய்து வருகிறோம். பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: