அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்; ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை ஐகோர்ட் மறுப்பு..!!

மும்பை: உள்வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கீழ் நீதிமன்றத்தை நாடி ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்தவா் கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக். இவருக்கு கட்டிட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் அலிபாக்கில் உள்ள வீட்டில் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார்.

மூடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டு இருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை அதிகாலை அலிபாக் போலீசார் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதில் 3 பேரையும் வருகிற 18-ந் தேதி வரை கோர்ட்டு காவலில் அடைக்க அலிபாக் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் 3 பேரும் கொரோனாவை தொடர்ந்து அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி, கைதான மற்ற இருவரான பெரோஷ் ஷேக், நிதிஷ் ஷர்தா தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அமர்வில் நேற்று முழுவதும் விசாரிக்கப்பட்ட நிலையில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மேலும் கீழ் நீதிமன்றத்தை நாடி ஜாமின் மனு தாக்கல் செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: