வேட்டங்குடி கிராமத்தில் பள்ளி கட்டிடம் இரவோடு இரவாக இடித்து அகற்றம்: கிராம மக்கள் அதிர்ச்சி

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தில் இரவோடு இரவாக பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றியதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 2006ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறையுடன் கூடிய கூம்பு வடிவ பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. பொதுவாக இக்கட்டிடத்தின் ஆயுள் காலம் 35 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் இந்த பள்ளி கட்டிடத்தை பொக்லைன் இயந்திரத்துடன் இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் ஒன்று திரண்டு கட்டிடம் வலிமையாகவும் தரமாகவும் இருக்கின்ற பொழுது ஏன் இடிக்க வேண்டும் என்று கேட்டு தடுத்து நிறுத்தினர். இதனால் அன்றைய தினத்தில் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டு அனைவரும் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பொக்லைன் இயந்திரத்துடன் சென்று அதே பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவரும் நஞ்சை புஞ்சை விவசாய சங்க மாவட்ட செயலாளருமான வில்வநாதன் கூறுகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டி 13 வருடங்கள் மட்டுமே ஆகிறது. இதே பள்ளி வளாகத்தில் 25 வருடங்களுக்கும் மேலான பழைய பள்ளிக்கட்டிடம் உள்ளது. அந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடிக்காமல் 13 வருடமே ஆன நிலையில் இந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.

இரவோடு இரவாக அதிகாரிகள் இந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன. இந்த அத்துமீறலை கண்டிக்கும் வகையில் வேட்டங்குடி, கேவர்ஓடை, வெள்ளப் பள்ளம் ஆகிய கிராம மக்களை ஒன்று திரட்டி விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories: