பலத்த மழையால் மலைச்சாலையில் உருண்டு விழும் பாறைகள்-வாகன ஓட்டிகள் கலக்கம்

பட்டிவீரன்பட்டி: பலத்த மழையால், சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் பாறைகள் சரிந்து விழுவதால், வாகன ஓட்டிகள் கலக்கத்தில் செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவ-பெரும்பாறை மலைச்சாலையில் ஆபத்தான பள்ளத்தாக்குகளும், வளைவுகளும் உள்ளன. தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து, ஓவாமலை போன்ற மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால், மலைச்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மலைச்சாலையில் பல இடங்களில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து கிடக்கின்றன. ரோட்டின் வளைவுகளில் உள்ள தடுப்புச்சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மழைத் தண்ணீரில் மேடான மலைப்பகுதியிலிருந்து அரித்து வரப்பட்ட மண் ரோட்டில் மேவிகிடக்கிறது. இதனால், வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கும் அபாயமும், விபத்து அபாயமும் உள்ளது. இந்த சாலையில்தான்  சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கில் விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மற்றும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்கின்றனர். எனவே, ரோட்டில் விழுந்து கிடக்கும் பாறைகளையும் மண்சரிவையும் சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், மலைத்தோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: