கடலூரில் பரபரப்பு செம்மண் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு-பொதுமக்கள் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

கடலூர் : கடலூர் கேப்பர் மலை பகுதியில் செம்மண்  குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து தினமும் ஏராளமான லாரிகள் செம்மண் ஏற்றிக்கொண்டு புருகீஸ்பேட்டை, வடுகப்பாளையம், காந்தி நகர் வழியாக செல்கிறது. இதனால் அப்பகுதி சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் லாரிகளில் இருந்து செம்மண் சாலையில் விழுந்து மழை நீரில் கரைந்து சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படும் நிலை உள்ளது.

அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை காந்தி நகர் பகுதியில் செம்மண் ஏற்றி வந்த லாரியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பொது மக்கள் கூறுகையில், எங்கள் பகுதி வழியாக செம்மண் லாரிகள் அதிகம் செல்வதால் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் எங்கள் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே இந்த வழியாக செம்மண் லாரிகள் செல்லாமல் மாற்று பாதை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: