ராமேஸ்வரம் கோயில் நகை தேய்மான விவகாரம் இழப்பீட்டு தொகையை ஏன் உங்களிடம் வசூலிக்கக்கூடாது?முன்னாள், இந்நாள் ஊழியர்களுக்கு இணை கமிஷனர் நோட்டீஸ்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் நகை தேய்மான விவகாரத்தில், மதிப்பு இழப்பீட்டு தொகையை ஏன் உங்களிடம் வசூலிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு, கோயில் இணை கமிஷனர் முன்னாள், இந்நாள் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிழா காலங்களுக்கு உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் மற்றும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளும் தங்கம், வெள்ளி வாகனங்கள், கேடயங்கள், தேர்களில் தேய்மானம் உள்ளதாக கடந்தாண்டு நடத்தப்பட்ட மறுமதிப்பீட்டில் தெரிய வந்தது.

இதுகுறித்து ராமநாதசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்டும், நகைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட கோயில் குருக்களிடம் விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து ராமேஸ்வரம் கோயில் இணை கமிஷனர் கல்யாணி, கோயில் நகைகளில் ஏற்பட்ட தேய்மானம் குறித்து விளக்கம் கேட்டு கோயிலில் பணியாற்றி வரும், ஓய்வு பெற்ற குருக்கள், பணியாளர்கள் என பலருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரம் கோயில் நகை தேய்மானம் மற்றும் எடை குறைவு தொடர்பாக கோயில் இணை கமிஷனர் கல்யாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:1978ம் ஆண்டுக்குப்பின் கடந்த 29.1.2019ம் தேதி முதல் 7.3.2019 வரையிலான 38 நாட்கள் சிவகங்கை துணை கமிஷனர் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலரால் கோயில் நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு பின் கழித்து நடைபெற்ற மதிப்பீட்டில் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 215 இனங்களில் தேய்மானம் காரணமாக 18 பொன் இனங்களில் சுமார் 68 கிராம் எடை குறைவுக்கான தொகை, 14 பொன் இனங்களில் சிறு, சிறு பழுது ஏற்பட்டுள்ளதற்கான மதிப்பு, வெள்ளி இனங்களில் பயன்பாட்டில் இருந்த மொத்தம் 344 இனங்களில் 42 இனங்களில் 25,811 கிராம் தேய்மானம் அடிப்படையிலான எடை குறைவுக்கான தொகை என மொத்தம் ரூ.14,43,254 இழப்பு காண்பித்தும், பொறுப்பில் இருந்த பணியாளர்களிடம் இருந்து இத்தொகையை வசூல் செய்யவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்கம், வெள்ளி இனங்களில் அனைத்து இனங்களும் எண்ணிக்கையில் சரியாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் கழித்து மறுமதிப்பீட்டு செய்யப்பட்டுள்ள நிலையில், 40 ஆண்டு காலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் 13 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 2 பேர், தற்போது பணியில் உள்ள 32 பேர் என மொத்தம் 47 நபர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், தேய்மானத்திற்கான மதிப்பீட்டு தொகையை அவர்களிடம் இருந்து ஏன் வசூலிக்கக்கூடாது எனவும் கேட்கப்பட்டுள்ளது. இது ஒரு வழக்கமான நடைமுறையாகும்.

முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மதிப்பீட்டு அறிக்கையிலோ, கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ தெரிவிக்கப்படவில்லை. எனவே, கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எவ்வித அச்சமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: