போலீஸ் ரோந்து வாகனத்தில் புகார் அளிக்கும் திட்டம்: மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும், குற்றங்களை தடுக்கவும் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னையில் செயல்பட்டு வரும் 136 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் பிரதான ரோந்து வாகனம், கூடுதல் ரோந்து வாகனம், ஜிப்ஸி ரோந்து வாகனம் மற்றும் சிறப்பு ரோந்து வாகனம், பெண் குழந்தைகள் மற்றும் முதியோரின் உதவிக்காக அம்மா ரோந்து வாகனம் என மொத்தம் 355 ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புகார் கொடுக்க காவல் நிலையம் செல்ல முடியாத மக்களுக்கு புகாரை பெற்று உதவிடும் வகையில் ரோந்து வாகனங்களில் புகார் அளிக்கும் திட்டத்தை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார். அதன்படி, சென்னையில் உள்ள 124 காவல்நிலைய ரோந்து வாகனங்கள் தினமும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடத்தில் உரிய நேரத்தில் நிறுத்தப்படும். காவல் நிலையம் சென்று புகார் அளிக்க இயலாதவர்கள் இந்த ரோந்து வாகனங்களில் புகார் அளிக்கலாம்.

Related Stories: