மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: இலங்கை மற்றும் அதை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டலமேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தற்போது அது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று, மேட்டுப்பாளையத்தில் 70 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளைய நிலவரப்படி (6ம் தேதி)  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். இதற்கு அடுத்த நாளும் அதேபோல மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை நகரில் நேற்று காலை 9 மணி அளவில் சில இடங்களில் திடீர் மழை பெய்தது. 11 மணிக்கு மேல் மாலை வரை வெயில் நிலவியது. இன்றும் சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

விமான நிலையத்தில் புகுந்த மழைநீர்

சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்பட பகுதிகளில் நேற்று காலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை கொட்டியது. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க கட்டுமான பணிகள் நடக்கிறது. அப்பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றினர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னை சர்வதேச விமானநிலையத்தின் தரைதளத்தில் உள்ள வருகை பகுதியில் புகுந்துவிட்டது. அங்கு விமான பயணிகளின் உடமைகள் வரும் கன்வேயர் பெல்ட்டுகள் உள்ள பகுதியில் தண்ணீர் புகுந்தது. அதேபோல், உள்நாட்டு முனையம் வருகை பகுதி வெளி வளாகத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் நிற்கும் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மழை நின்றதும் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது.

Related Stories: