மனுநூல் விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

கூடுவாஞ்சேரி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுநூல் விளக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய, கூடுவாஞ்சேரி போலீசில் அனுமதி  கேட்டனர். அதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். ஆனால், தடையை மீறி மனுநூல் விளக்க துண்டு பிரசுர வினியோகம் செய்ய கூடுவாஞ்சேரி பஸ்  நிலையத்தில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். செங்கல்பட்டு  தொகுதி செயலாளர் தே.தென்னவன்  தலைமை தாங்கினார். நந்திவரம் கூடுவாஞ்சேரி  பேரூர் நகர செயலாளர் திராவிட முரளி, மறைமலைநகர் நகர செயலாளர் வீரா, இளைஞர்  எழுச்சி  பாசறை செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் வண்டலூர் வேதகிரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுவாஞ்சேரி நகர பொறுப்பாளர்  ரமணா  வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சூ.க.விடுதலைசெழியன் கலந்து கொண்டு, மனுநூல் விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி போராட்டத்தை  தொடங்கி வைத்தார். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் அங்கு சென்று, தடையை மீறி துண்டு பிரசுரம் வழங்கினால் கைது செய்யப்படுவீர்கள் என  எச்சரித்தனர். ஆனால், போலீசாரின் எச்சரிக்கையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், துண்டுப்பிரசுரம் வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில்  அடைத்தனர்.  போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

Related Stories: