ரேபரேலி பகுதியில் உருவாக்கப்பட்ட கமலா நேரு கல்வி சங்கத்தில் முறைகேடு?... காங். அதிருப்தி எம்எல்ஏ போலீசில் புகார்

லக்னோ: ரேபரேலி பகுதியில் உருவாக்கப்பட்ட கமலா நேரு கல்வி சங்கத்தில் முறைகேடு நடப்பதாக காங். அதிருப்தி எம்எல்ஏ பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநில பொருளாதார குற்றப் பிரிவு இயக்குநரிடம், ரேபரேலி சதரை சேர்ந்த காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங் அளித்த புகார் மனுவில், ‘1976ம் ஆண்டில் ரேபரேலியின் சிவில் லைன்ஸ் பகுதியில் கமலா நேரு கல்விச் சங்கம் உருவாக்கப்பட்டது. சங்கத்தின் 8 முக்கிய உறுப்பினர்கள் இறந்துவிட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷீலா கவுல் நீண்ட காலமாக இச்சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். 2003ம் ஆண்டில், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கொண்ட புதிய செயற்குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சங்கத்திற்கு சொந்தமான நிலங்கள் மூலம் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடக்கிறது. பெண் குழந்தையின் கல்வியை ஊக்குவிக்கும் பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. இப்போது அந்த நிலத்தை பல கோடி ரூபாய்க்கு விற்கும் முயற்சிகள் நடக்கின்றன. சங்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இப்பகுதியில், சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் 150 கடைகள் இருப்பதால், மேற்கண்ட நிலங்களை விற்பது சட்டவிரோதமானது. எனவே, இச்சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்’என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில ஊடக அழைப்பாளர் லாலன்குமார் கூறுகையில்,‘பாஜகவின் உத்தரவின் பேரில் அதிதி சிங் செயல்படுகிறார். அவர், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். கட்சியுடன் அவருக்கு விரோதம் இருந்தால், அவர் கட்சியில் இருந்து விலகி விடலாம். ஏன் கட்சியில் இருந்து கொண்டு, கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்’என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: