சத்தியமங்கலத்தில் ஆளுயர தேன் வாழைத்தார் ரூ.1000க்கு ஏலம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசூர், பெரியூர், உக்கரம், செண்பகபுதூர், பவானிசாகர், சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2056 வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

இதில், செண்பகப்புதூரை சேர்ந்த விவசாயி சஞ்சீவ் என்பவர் தனது தோட்டத்தில் ஆளுயரத்திற்கு விளைந்த இரண்டு தேன்வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தார். ஆளுயரத்தில் இருந்த தேன் வாழைத்தாரில் 18 சீப்புகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட வாழைக்காய்கள் இருந்தன.

இந்த வாழைத்தாரை ஏலம் எடுக்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. விவசாயி சஞ்சீவி கொண்டு வந்த 2 வாழைத்தார்களில் ஒரு தார் ரூ.1000 க்கும், மற்றொரு தார் ரூ.800க்கும் ஏலம் போனது. இதேபோல், கதலி, நேந்திரன், செவ்வாழை, தேன்வாழை, ரஸ்தாளி, பூவன், மொந்தன், ரொபஸ்டா, பச்சைநாடன் உள்ளிட்ட 2056 வாழைத்தார்கள் ரூ.4 லட்சத்திற்கு விற்பனையானது.

Related Stories: