கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்துக்காக ஓய்வு பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சிந்து

ஐதராபாத்: கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்துக்காக, பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து திடீரென ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் தகவல் பதிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து (25). இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டென்மார்க் ஓபன்தான் கடைசி போட்டி. நான் ஓய்வு பெறுகிறேன்’ என்று பெரிய எழுத்துகளில் பதிவு செய்திருந்தார். அதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பேட்மின்டன் உலகமே அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தது. ஆனால், கூடவே அவர் பதிவிட்டிருந்த நீளமான கடிதத்தில்தான் முழு விவரங்களும் இருந்தன.

அந்த கடிதம் சுருக்கமாக, ‘நான் சொல்வது தவறாக உணரப்படும். என் கடிதத்தை முழுமையாக படித்தால் புரிந்து கொள்வீர்கள். கொரோனா பெருந்தொற்று எனது கண்களை திறந்துள்ளது. அதனை எப்படி கையாளுவது என்று புரியாமல் தடுமாறுகிறேன். அதனை ஒப்புக் கொள்கிறேன். எதிராளியுடன் சண்டையிட்டு வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்துள்ளேன். ஆனால், ஒட்டு மொத்த உலகையும் ஆட்டிப் படைக்கும் கண்ணுக்கு தெரியாத வைரசுடன் எப்படி போராடுவது? வீட்டிலேயே பல மாதங்களாக இருக்கிறோம். வெளியே செல்லும் போது இன்னும் கேள்வி எழுகிறது.

இந்த ஓய்வற்ற மனநிலையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன். எதிர்மறை எண்ணம், அச்சத்தில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்து விட்டேன். நாம் அனைவரும் இணைந்து இந்த வைரசை வீழ்த்த வேண்டும். டென்மார்க் ஓபன் நடக்கவில்லை. ஆனால் அது நான் பயிற்சி பெறுவதை தடை செய்யாது. இன்னும் கடுமையாக பயிற்சி செய்து அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயாராவேன்’ என்று எழுதியுள்ளார். கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிந்து செய்த சித்து வேலை... பேட்மின்டன் உலகை லேசாக ஆட்டி படைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

Related Stories: