அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அருப்புக்கோட்டையில் பந்தல்குடி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 27 டாக்டர்கள், 6 செவிலிய கண்காணிப்பாளர்கள், 53 செவிலியர்கள், 36 ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், கொரோன சிறப்பு பணிக்காக 34 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பொதுப்பிரிவு, டயலாசிஸ் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு போன்ற வசதிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அணைத்துவசதிகளும் உள்ளன.

இங்குள்ள பிரசவ வார்டில் மருத்துவர்களின் சிறப்பான கவனிப்பால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு விரும்பி வருகின்றனர். அருகில் உள்ள சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களும் இங்கு பிரசவத்திற்கு வருகின்றனர். மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை மற்றும் சீரிய நிர்வாகத்தால் என்ஏபிஹெச், காயகல்ப், தேசிய தரச்சான்று உட்பட பல விருதுகள் பெற்றுள்ளன. மேலும் திருச்சுழி, நரிக்குடி,ரெட்டியபட்டி, பந்தல்குடி, காரியாபட்டி, சாத்தூர், விருதுநகர் உட்பட ஊர்களுக்கு இந்த மருத்துமனை மையமாக உள்ளது. அவசர சிகிச்சைக்கு எளிதாக வரக்கூடிய அளவில் சாலை வசதி உள்ளது. மாவட்டத்தில் இந்த மருத்துமனைக்கு மட்டும்தான் 294 படுக்கைகள் உள்ளன.

மற்ற ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த வசதி இல்லை. மேலும் மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக, டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், உடல் முழு பரிசோதனை ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் மனநல சிகிச்சை பிரிவு, தொழுநோய் பிரிவு, யோகா நேச்சுரபதி பிரிவு உள்ளது. இங்குள்ள சித்தா பிரிவில் கொரோனாவுக்கு மருந்து கொடுக்க அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட மருத்துவமனை மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இதனால் அருப்புக்கோட்டையில் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: