நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் ‘புக்கிங்’ டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை: எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல்

புதுடெல்லி: நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் சிலிண்டர் ‘புக்கிங்’ திட்டத்தில், டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை என்று எண்ணெய் நிறுவன அதிகாரி தெரிவித்தார். நாடு முழுவதும் பல கோடி மக்கள் சமையலுக்கு ‘எல்பிஜி’ காஸ் சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று (நவ. 1) முதல் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திற்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி, எல்பிஜி சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டுக்கு சிலிண்டர் வர வேண்டுமெனில் மொபைலில் வரும் ஓடிபி (OTP) எண்ணை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், முறைகேடுகளை தவிர்க்கவும் இப்புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

அதாவது, எல்பிஜி சிலிண்டர் வீட்டு டெலிவரியை தேர்வு செய்த வாடிக்கையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட சிலிண்டர் நிறுவனம் டெலிவரி அங்கீகாரக் குறியீடு (டிஏசி) பாதுகாப்பு எண்ணை வழங்கும். இந்த எண் மூலம் வாடிக்கையாளர் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி பாஸ்வேர்டை, காஸ் சிலிண்டர் டெலிவரி பணியாளரிடம் தெரிவித்தால் மட்டுமே புதியதாக காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டுமே ‘ஓடிபி’ பாஸ்வேர்ட் அனுப்பப்படும். புதிய நடைமுறைக்கு மாறாத வாடிக்கையாளர்கள் சிலிண்டர் ஆர்டர் செய்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று பல்வேறு தரப்பிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டிஏசி நடைமுறை தொடரும். ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, அனைத்து வாடிக்கையாளரின் மொபைல் எண்ணும், காஸ் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்படவில்லை. பல வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிக்கையையும் மாற்றியுள்ளனர். தற்போதைய புதிய நடைமுறைபடி டிஏசி குறயீடு எண் பெறவில்லை என்பதற்காக வாடிக்கையாளர்கள் வருத்தப்படத் தேவையில்லை. அதனால், அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும் கருத்தில் கொண்டு, டிஏசி கட்டாயமாக்குவதற்கான முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: