மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை 15ம் தேதி திறப்பு: நெய் அபிஷேக தேங்காய் கிடைக்காது

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர், 2 வாரங்களுக்கு முன்பு ஐப்பசி மாத பூஜைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தினமும் 250 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. இதில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தினத்தில் 5,000 பக்தர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு நேற்று முதல் (1ம் தேதி) தொடங்கியது.  

சபரிமலை வரும் பக்தர்கள் விரதம் இருந்து, பூஜை செய்து தேங்காய்களில் நெய் நிறைத்து இருமுடி கட்டுகளில் எடுத்து வருவார்கள். இந்த நெய் தேங்காய் ஐயப்ப முத்திரையாக கருதப்படுகிறது. பக்தர்கள் கொண்டு வரும் நெய் தேங்காய்கள் சிறப்பு கவுன்டர்கள் மூலம் சேகரிக்கப்படும். இதற்காக, பக்தர்கள் முந்தைய நாளே வந்து சந்நிதானத்தில் தங்கியிருப்பார்கள். பக்தர்களின் நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்யப்படும். பின்னர், இந்த அபிஷேக நெய் பக்தர்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, இந்த ஆண்டு பக்தர்கள் கொண்டு வரும் நெய், அபிஷேகம் செய்யப்பட்டு அது அதே பக்தருக்கு திரும்ப வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

* மற்றவர்களின் நெய் கிடைக்கும்

பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கியிருக்க அனுமதி இல்லாததால் ஏற்கனவே முன்னதாக வந்த பக்தர்கள் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நெய், அடுத்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதனை பெற்றுக் கொண்டு பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து அகன்று விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: