தீபக் ஹூடா அதிரடி வீண் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்ற சிஎஸ்கே: பரிதாபமாக வெளியேறியது பஞ்சாப்

அபுதாபி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில், 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்திய சென்னை அணி கவுரவமாக விடைபெற்ற நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை வீணடித்த பஞ்சாப் அணி பரிதாபமாக வெளியேறியது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் வாட்சன், சான்ட்னர், கர்ண் ஷர்மாவுக்கு பதிலாக டு பிளெஸ்ஸி, தாஹிர், ஷர்துல் தாகூர் இடம் பெற்றனர். பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல், அர்ஷ்தீப் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷம், மயாங்க் அகர்வால் சேர்க்கப்பட்டனர்.

கிங்ஸ் லெவன் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல், அகர்வால் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 48 ரன் சேர்த்தனர். அகர்வால் 26 ரன் (15 பந்து, 5 பவுண்டரி), ராகுல் 29 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி என்ஜிடி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற கிளீன் போல்டாகி வெளியேறினர். அடுத்து வந்த பூரன் 2, கிறிஸ் கேல் 12, மன்தீப் சிங் 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப... பஞ்சாப் அணி 108 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடா, பவுண்டரியும் சிக்சர்களுமாகப் பறக்கவிட்டு சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தவிடுபொடியாக்கினார். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத சென்னை பவுலர்கள் ஸ்தம்பித்தனர். ஹூடா 26 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். நீஷம் 2 ரன் எடுத்து என்ஜிடி வேகத்தில் கெயிக்வாட் வசம் பிடிபட்டார். கிங்ஸ் லெவன் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. ஹூடா 62 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் ஜார்டன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் என்ஜிடி 3 விக்கெட், ஷர்துல் தாகூர், ஜடேஜா, தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

ருதுராஜ் கெயிக்வாட், டு பிளெஸ்ஸி இருவரும் துரத்தலை தொடங்கினர். அமர்க்களமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 82 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. டு பிளெஸ்ஸி 48 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜார்டன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுல் வசம் பிடிபட்டார். அடுத்து கெயிக்வாட் உடன் ராயுடு இணைந்தார். கெயிக்வாட் 38 பந்தில் அரைசதத்தை நிறைவு செய்தார். சென்னை அணி 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து அபாரமாக வென்றது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட அந்த அணி, கடைசியாக விளையாடிய 2 லீக் ஆட்டத்திலும் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தி கவுரவமாக விடைபெற்றது. ஆரம்பகட்ட சொதப்பல்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக 5 வெற்றிகளுடன் எழுச்சி கண்ட பஞ்சாப் அணி, கடைசி 2 போட்டியில் தோல்வியைத் தழுவி பிளே ஆப் சுற்று வாய்ப்பை வீணடித்து பரிதாபமாக வெளியேறியது. சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: