இன்னும் 12 நாட்களில் தீபாவளி பண்டிகை புத்தாடை வாங்க அலைமோதும் கூட்டம்: மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய கடைவீதிகள்; மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் நேற்று தமிழகம் முழுவதும் புத்தாடை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் தீபாவளிக்கு 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை நாள் ஆகும். இதனால், தீபாவளி ஷாப்பிங் செய்ய சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை முக்கிய வணிக பகுதிகளான தியாகராய நகர், புரசைவாக்கம், பிராட்வே, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நேரம் ஆக, ஆக, தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது. ஒவ்வொரு தெருவையும் கடக்கவே முடியாத அளவில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் சாலையோர கடைகளில் அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றின் விற்பனையும் களைகட்டியது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர். அவர்கள் ‘மாஸ்க்’ கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். மேலும், நுழைவாயில் பகுதியில் சுகாதாரத்துறையினர், போலீசார் நின்று கொண்டு “மாஸ்க்”  அணியாமல் வந்தவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பிய காட்சியை காணமுடிந்தது. அதையும் மீறி மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகளில் பொருட்கள் வாங்க கடைகளுக்குள் நுழைபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டும், கைகளில் சானிடைசர் அடிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில பெரிய கடைகளில் நுழைவாயிலில் கைகளை கழுவுவதற்காக தற்காலிக தண்ணீர் பைப்புகளை அமைத்திருந்தனர். மேலும் பொருட்கள் வாங்க வந்த பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். பொதுமக்கள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக சிறப்பு பஸ்களும் நேற்று இயக்கப்பட்டன. கூட்டத்தை சமாளிக்கும் வகையிலும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உயரமான தற்காலிக கோபுரங்களை அமைத்து பைனாக்குலர் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

* பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

* கூட்டத்தை சமாளிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் உயரமான கோபுரங்கள் அமைத்து பைனாக்குலர் மூலம் போலீசார் கண்காணித்தனர்.

Related Stories: