தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுடன் மா.கம்யூ கூட்டணி தொடரும்: பொதுச்செயலாளர் யெச்சூரி அறிவிப்பு

கொல்கத்தா: அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுடன் மா.கம்யூ கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் யெச்சூரி அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மே மாதத்திற்குள் பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், மாநில தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை துவங்கிவிட்டன. இந்நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: மேற்குவங்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைக்கவுள்ளது. அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு எதிரான தேர்தல் வியூகத்தை மார்க்சிஸ்ட் கட்சி வகுக்கும்.

 தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து இடம்பெறும். கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியுடனான கூட்டணி தொடரும். அசாமில் ஆளும் பாஜக அரசு, மதம் சார்ந்த வன்முறைகளைத் தூண்டி  வருகிறது. அதனால், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, பாஜக அரசை வீழ்த்துவதற்காக அந்த மாநிலத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ-எம் கட்சி 26 இடங்களில் மேற்குவங்கத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா 2 நாள் பயணம்

பீகார் பேரவை தேர்தல்கள் நடைபெற்று வரும்நிலையில், மேற்குவங்க தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது. பாஜகவின் அடுத்த நகர்வாக மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா ஆட்சியை அகற்ற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 5ம் தேதி இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு செல்ல திட்டமிட்டார். அங்கு அவர் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திடீரென அமித் ஷாவுக்கு  ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வரும் 6ம் தேதி கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேற்குவங்காளம் செல்லவிருந்தார். ஆனால், இப்போது அமித் ஷா ஆரோக்கியமாக உள்ளதால், ஜே.பி.நட்டாவின் திட்டம் ரத்து செய்யப்பட்டது.  அதனால், அமித் ஷா வருகிற 5, 6ம் தேதிகளில் மேற்குவங்கத்தில் கட்சியினரை சந்திக்கிறார்.

Related Stories: