ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் நவ. 20ல் கோவாவில் தொடக்கம்: பூட்டிய அரங்கில் போட்டிகள்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் நவ. 20ம் தேதி தொடங்குகிறது. கொரோனா பீதி காரணமாக போட்டிகள் அனைத்தும் கோவாவில், பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடக்க உள்ளது. நாட்டின் முன்னணி கால்பந்து போட்டியான ஐஎஸ்எல் 6வது சீசனின் இறுதிப் போட்டி, கொரோனா பீதி காரணமாக கடந்த மார்ச் மாதம் பூட்டிய அரங்கில் நடந்தது. அதே பிரச்னை காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடந்து வருவதால், ஐஎஸ்எல் 7வது சீசன் நவம்பருக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கூடவே போட்டிகள் அனைத்தும் கோவாவில் மட்டும் நடைபெறும் என்றும், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது.

ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐஎஸ்எல் 7வது சீசனுக்கான முதல் கட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவ.20ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஏடிகே மோகன் பகான் - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி தனது முதல் போட்டியில் நவ.24ம் தேதி ஜாம்ஷெட்பூர் எப்சி அணியை எதிர்க்கொள்கிறது. இந்த ஆண்டு  ஈஸ்ட் பெங்கால் எஸ்சி புதிதாக இணைந்துள்ளது. அதனால் மொத்தம் 11 அணிகள் களம் காண உள்ளன. எனவே இந்த சீசனில், லீக் சுற்றில் மொத்தம் 115 போட்டிகள் நடக்க உள்ளன. முதல் கட்ட அட்டவணையில் ஜன.11ம் தேதி வரை நடைபெற உள்ள 55 லீக் போட்டிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

அதற்கு ஏற்ப எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும். அதேபோல் அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கான அட்டவணையும் வழக்கம் போல் லீக் போட்டிகளின் முடிவில் அறிவிக்கப்படும். போட்டிகள் அனைத்தும் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியம் (பதோர்தா), ஜிஎம்சி அரங்கம் (பாம்போலிம்), திலக் அரங்கம் (வாஸ்கோ) ஆகிய 3 அரங்குகளில் மட்டுமே நடக்க உள்ளன. கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் டிஜிட்டல் கண்காணிப்பு முறையில் பாதுகாக்கப்படுவார்கள் என்று ஐஎஸ்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: