திமுக ஆட்சியின் சாதனைகளையும் அதிமுக ஆட்சியின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: “திமுக ஆட்சியின்  சாதனைகளையும், அதிமுக ஆட்சியின் வேதனைகளையும் மக்களிடம் நினைவூட்டிச்  சொல்லுங்கள். சதிகார, அதிகாரக் கூட்டத்தை வெல்லும் ஆற்றல் பெற்றது கலைஞரின் இலட்சியப் படை” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர  பகுதி-பேரூர் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து உரையாடும் வகையில், ஆலோசனைக் கூட்டங்கள் அக்டோபர் 21 தொடங்கி அக்டோபர் 27 வரை நடந்தன. நாடாளுமன்ற தேர்தல் களம் போல, சட்டமன்ற தேர்தல் களத்திலும் மேற்கு மண்டலத்தில் மகத்தான வெற்றியை ஈட்டுவதற்கான களப்பணிகள் குறித்தும், ஆள்வோரின் அதிகார அத்துமீறல்களை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அடிமட்டம் வரையிலான உள்கட்சி ஜனநாயக அமைப்பு பலம் பெறும் போதுதான், கோட்டை வரை வெற்றிக்கொடி உயர்ந்து பறக்கும். ‘எல்லோரும் நம்முடன்’ திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் ஆர்வமாக இணைகிறார்கள். இளைஞர்களும் பெண்களும் ஆர்வத்துடன் வருவதாகவும், இளைய தலைமுறையினருக்கு திமுக மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருப்பதையும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.  கலந்தாலோசனையின் வாயிலாக, 234 சட்டமன்ற தொகுதிகளில் 210 சட்டமன்றத் தொகுதிகளின் கள நிலவரத்தை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு அமைந்தது. நான்கு மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகளும் ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் கருத்துகளை வழங்கினார்கள். திமுக, மக்களின் பேரியக்கம்.

அதனால் மக்களிடம் செல்லுங்கள், மக்களுக்கு துணையாக என்றும் நில்லுங்கள், திமுக ஆட்சியின் சாதனைகளையும், அடிமை ஆட்சியின் வேதனைகளையும் மக்களிடம் நினைவூட்டிச் சொல்லுங்கள்.  அதிகாரத்தில் இருப்போரின் ஆட்டத்தை மீறி - மக்களின் பேராதரவுடன், ஆச்சரியம் தரும் வெற்றிக்கு ஆயத்தமாகுங்கள். அந்த வெற்றிக் களத்திற்கான விதை, இந்தக் கலந்தாலோசனைக் கூட்டங்களில் ஊன்றப் பட்டிருக்கிறது. உழைப்பெனும் நீர்வார்த்து உன்னத வெற்றியைக் காண்போம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: