ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 81 ஆயிரம் பறிமுதல்

சென்னை:  அம்பத்தூரில் உள்ள வில்லிவாக்கம் ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வில்லிவாக்கம், பூந்தமல்லி, சோழவரம், புழல் ஆகிய ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கி வருவார்கள். இந்த அலுவலகத்தில், ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் சென்றன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையில் 6பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வந்ததை தெரிந்த  அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளே இருந்து வெளியே வர முயன்றனர். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலகத்தின் வாயில் கதவை மூடி உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல  விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதன்பிறகு, லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த உதவி செயற்பொறியாளர் கீதா உள்பட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கணினி மற்றும் பதிவேடுகளில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.81ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 5 மணிநேரம் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இதனால் அம்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: