ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்; ரிசர்வ் வங்கி அதிரடி: ஜனவரி முதல் நடைமுறைக்கு வருகிறது

சென்னை: பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும்மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யவுள்ளது. வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பணம் பெறவோ, பணத்தை செலுத்தவோ  வங்கிகளில் நாம் காசோலைகளை கொடுக்கிறோம். இந்த காசோலைகளை பணமாக மாற்றும்போது பணம் பெறும் நபரின் வங்கி கணக்கு எண், பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் கையெழுத்திட்ட காசோலைகள் தொலைந்து விட்டாலோ, தவற விட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் வங்களில் பணம் பெற வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தடுக்க காசோலை தொலைந்தவுடன் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்திவைக்க முடியும். காசோலை பரிவர்த்தனை உள்ள வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் பணம் பட்டுவாடாவை நிறுத்தி வைக்க முடியும். இதுவரை இந்த நடைமுறைதான் இருந்துவந்தது. ஆனால், இதிலும் பல்வேறு பிரச்னைகளும், நடைமுறை சிக்கல்களும், தகவல் பரிமாற்றம் தாமதமும் ஏற்படுவதால் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அது தொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது. இதற்காக ‘’காசோலை துண்டிப்பு முறை’’ என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்மந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும். இந்த முறை மூலம் யாருக்கு காசோலை தரப்படுகிறது. அந்த காசோலை உண்மையானதா என்பன உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்யப்படும். ரூ.5 லட்சத்திற்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். இந்த புதிய முறை குறித்து சம்மந்தப்பட்ட வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், வங்கிகளில் அறிவிப்பு பலகை ஆகியவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: