வைகை அணை நீர் மட்டம் ஒரே மாதத்தில் 12 அடி சரிவு; நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் 12 அடி வரை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்க்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்த காரணத்தாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் காரணத்தினாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. நீர்மட்டம் 64 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கும், திருமங்கலம் மற்றும் கள்ளந்திரி பகுதிகளில் ஒருபோக பாசனத்திற்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாசன பகுதிகளுக்கு நீர்வரத்தை விட கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்த காரணத்தால் முறைபாசனம் அமல்படுத்தப்பட்டு வைகை அணையில் இருந்து குறைந்தளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது வைகை அணையில் இருந்து 1202 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் தற்போது தேனி மாவட்டத்தில் மழை அளவு குறைந்த காரணத்தினாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குறைவான தண்ணீர் திறந்து விடப்படும் காரணத்தினாலும் வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டமும் தற்போது 52.85 அடியாக உள்ளது. இதில் ஒரே மாதத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 12 அடியாக குறைந்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: