வனவிலங்குகளின் தாகம் தணிக்க வனஎல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தினமும் நீர் நிரப்ப வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார காடுகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானைகளின் வழித்தடம் என்பதால் காட்டு யானைகளின் நடமாட்டம் ஆண்டு முழுவதுமே காணப்படும். வனத்தினுள் வறட்சி ஏற்படும் காலங்களில் தண்ணீர் தேடி காட்டை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகும் யானைகள் அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இதனை தவிர்க்க வனத்துறையினர் யானைகள் வெளியேறும் வன எல்லைகளில் சுமார் 31 இடங்களில் தண்ணீர் தொட்டிகளை கட்டி அதில் நீர் நிரப்பி பராமரித்து வருகின்றனர். கோடை காலங்களில் தண்ணீர் தேடி அலையும் யானைகள் இந்த தொட்டிகளில் நீரை அருந்தி தாகம் தணித்த பின்பு மீண்டும் காட்டுக்குள் சென்று விடும். அண்மை காலமாக இப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக வனத்தின் வறட்சி நீங்கி வனத்தினுள் உள்ள குட்டைகள், நீரோடைகள், மழை நீர் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியே காணப்படுகிறது.

ஆனாலும் இன்னமும் யானை கூட்டங்கள் பல நீர் நிரம்பி காணப்படும் வனக்குட்டைகளை நோக்கி செல்லாமல் இந்த தொட்டி நீரை அருந்தவே வருகின்றன. இயற்கையான மழை நீர் தேக்கங்கள் சேற்று மண் கலந்து காணப்படுவதாலும், காட்டு மாடுகள், மான் போன்ற விலங்கினங்கள் இந்த நீரை அருந்துவதொடு அதனை அசுத்தபடுத்தி விடுவதாலும் பெரும்பாலான யானைகள் சுத்தமான நிலத்தடி நீரால் நிரப்பப்படும் தொட்டிகளை தேடி வருகின்றன. எனவே வனத்துறையினர் மழை காலங்களிலும் இந்த தண்ணீர் தொட்டிகளை தொடர்ந்து பராமரிப்பது அவசியம் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து வனத்துறையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, வன எல்லைகளில் உள்ள தொட்டிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தினசரி அதில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: