வரத்து குறைவு; குமரியில் தேவை அதிகரிப்பால் வாழை இலை விலை உயர்வு..ஒரு கட்டு ரூ.1500க்கு விற்பனை

நாகர்கோவில்: சுபநிகழ்ச்சிகளால் வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதால், வாழை இலை விலை உயர்ந்துள்ளது. 150 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ.1500க்கு விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், வடசேரி கனகமூலம் காய்கறி சந்தைக்கு பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் அதிக அளவு லாரிகளில் தினமும் வருகிறது. இங்கிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். இதுபோல் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவு வாழை இலைகளும் விற்பனைக்கு வருகிறது. ஒரு கட்டில் 150 எண்ணத்தில் இலைகள் இருக்கும். இந்த கட்டில் 5 இலைகள் கொண்டு அடுக்கி வைத்து கட்டப்பட்டு இருக்கும். சாதாரண நாட்களில் இந்த இலை கட்டு 100 முதல் 300 வரை விலைபோகும்.

இதனால் வாழை விவசாயிகளுக்கு போதுமான அளவு லாபம் கிடைப்பது இல்லை. கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து சுபநிகழ்ச்சிகள்  கூட்டம் இன்றி எளிதாக நடத்தப்பட்டதால், வாழை இலைகளின் தேவைகள் குறைவாக இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் சுபநிகழ்ச்சிகள் அதிக அளவு நடந்து வருகிறது. மேலும் நவராத்திரி விழா கடந்த சில நட்களுக்கு முன்பு நடந்ததால் வாழை இலைகளில் தேவை அதிகரித்தது. மேலும் சுபநிகழ்ச்சிகள் நடந்து வருவதால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு வாழை இலைகள் குமரிக்கு வருகிறது. சரஸ்வதி பூஜையின்போது ஒரு கட்டு இலை a2000க்கு விற்பனையானது. தற்போது வாழை இலை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ஐப்பசி மாதம் என்பதால் சுபமூர்த்தங்கள் அதிக அளவு நடந்து வருவதால் ஒரு கட்டு வாழை இலை 1500க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் சிறிது கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து வாழை இலை மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக வாழை இலை விற்பனை அடியோடு பாதித்தது. இதனால் வாழை இலைகள் விற்காமல் பல கட்டுக்கள் குப்பைக்கு சென்ற நாட்களும் உண்டு. தற்போது சுபநிகழ்ச்சிகள் அதிக அளவு நடப்பதாலும், கேரளா மாநிலத்திற்கு அதிக அளவு வாழை இலைகள் செல்வதாலும் வாழை இலைகளிள் தேவைகள் அதிகரித்துள்ளது. இதனால் வாழை இலையின் விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கட்டு வாழை இலை தற்போது 1500க்கு விற்பனையாகிறது. தரம் குறைந்த வாழை இலை 1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைகள் அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: