19 மாநிலங்களில் உள்ள 736 அணைகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 10,211 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் 19 மாநிலங்களில் உள்ள 736 அணைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதில், அணைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், 19 மாநிலங்களில் உள்ள 736 அணைகளை பராமரிக்கவும், அவற்றை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல்  அளிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் அளித்த பேட்டியில், “2வது மற்றும் 3வது கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு, செயல்திறன் மேம்பாட்டு  திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

10,211 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை, 2021 ஏப்ரல் முதல் 2031 மார்ச் வரையிலான காலத்திற்குள் 2 கட்டங்களாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதன் முதலில் கடந்த 2012ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டு 2020ம்  ஆண்டில் முடிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 7 மாநிலங்களில் 223 அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 80 சதவீத நிதியை உலக வங்கி வழங்கும்,” என்றார்.

* மிகப்பெரிய அணைகள் கொண்ட நாடுகளில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது.

* இந்தியாவில் மொத்தம் 5,334 மிகப்பெரிய அணைகள் உள்ளன.

* இவற்றில் 411 அணைகளின் கட்டுமான பணி நடந்து வருகிறது.

*  நாட்டின் 80 சதவீத அணைகள் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை. சில 100 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை.

Related Stories: