உத்தரகாண்ட் முதல்வர் ராவத் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீதான ஊழல் குற்றச்சாட்டு பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.உத்தரகாண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், உமேஷ் சர்மா என்ற பத்திரிகையாளர் கடந்த ஜூன் 24ம் தேதி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அம்ரிதேஷ் சவுகான் என்பவர், கடந்த 2016ல் தனக்கு நெருக்கமானவரை ஜார்க்கண்டில் பசு பாதுகாப்பு திட்டத்தின் தலைவராக நியமித்ததற்கு ராவத்துக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். ராவத்தின் உறவினரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான ஹரேந்திர ராவத்தின் வங்கி கணக்கில் ரூ.25 லட்சத்தை அவர் செலுத்தினார் என கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜூலை 31ம் தேதி போலீசில் ஹரேந்திர ராவத் அளித்த புகாரில்,  `என் மீதான ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு விசாரிக்க வேண்டும். என்று கூறினார். மேலும், இம்மாநில உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். ஆனால்,  பத்திரிகையாளர் சர்மா மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய ஹரேந்திராவின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு பற்றி சிபிஐ விசாரணை நடத்தும்படி அதிரடியாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஹரேந்திர ராவத் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராவத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ``முதல்வரிடம் விசாரிக்காமல் எப்ஐஆர் பதிவு செய்ய முடியாது,’’ என்றார். இதையடுத்து, ‘முதல்வரிடம் விசாரிக்காமல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது,’ என்று கூறிய நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால், ராவத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல், தற்காலிகமாக தீர்ந்துள்ளது.

Related Stories: