சென்னை to மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்.!!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை பயணம் செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படும். இதன்படி, பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நேற்று தொடங்கியது. நாளை 30-ம் தேதி தேவரின் 58-வது குருபூஜை மற்றும் 113-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதே விமானத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று முதல்வர் பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் இருந்து இருவரும் ராமநாதபுரம் செல்கின்றனர். ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>