குமரியில் டாக்டர் தற்கொலை விவகாரத்தில் டி.எஸ்.பியை காப்பாற்ற போலீஸ் அதிகாரிகள் முயற்சி: விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிக்கை

நாகர்கோவில்: குமரியில் டாக்டர் தற்கொலை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை காப்பாற்ற அதிகாரிகள் முயற்சி செய்வதால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவிலை அடுத்த பறக்கை அருகே இலந்தவிளை பகுதியை சேர்ந்த திமுக மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் சிவராம பெருமாள் (43), கடந்த 26ம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், இலந்தவிளையை சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர் காரணம் என கூறி இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

இது தொடர்பாக விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி. மணிமாறன், ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி. சாஸ்திரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் சிவராம பெருமாள் மனைவி, உறவினர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூறுகையில், டி.எஸ்.பி. பாஸ்கரன் மிரட்டியதே தற்கொலைக்கு காரணம் என சிவராம பெருமாள் தெளிவாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜூலை மாதம் நடந்தது என கூறி பிரச்னையை திசை திருப்ப காவல்துறை அதிகாரிகள் முயல்கிறார்கள். டி.எஸ்.பி. பாஸ்கரனை பணியில் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. டி.எஸ்.பி.யின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். உள்ளூர் போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றனர். இது குறித்து எஸ்.பி. பத்ரிநாராயணன் கூறுகையில், உரிய விசாரணை நடந்து வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: