அய்யனேரி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவரை பெண்கள் முற்றுகை: வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பள்ளிப்பட்டு: குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி ஒன்றிய குழு பெண் தலைவரை பெண்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  சம்பவம் ஆர்.கே.பேட்டை அருகே நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அய்யனேரி ஊராட்சி மேட்டு கண்டிகை ஜிகுலூர்  இடையில்  தார் சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்துகொள்ள  மேட்டு கண்டிகைக்கு சென்ற  ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு பெண் தலைவர் ரஞ்சிதாவை 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு குடிநீருக்காக ஜிகுலூர் வரை நடந்து  சென்று எடுத்து வர வேண்டிய நிலையில், சாலை வசதி இல்லாததால், கடும் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

 

அப்போது,  சாலை பணிகள் தொடங்கி வைக்க அங்கு வந்த திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு  உடனடியாக சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்று  உறுதி கூறியதை ஏற்று பெண்கள் திரும்பிச் சென்றனர். எம்.எல்.ஏவுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஒன்றிய குழு  உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: