உள்ளாட்சி அமைப்புக்கு நிதி கோரிய தமிழக மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

புதுடெல்லி: 2016ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிதிய வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக வழக்கறிஞர் ஜெய்சுகின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 11ம் தேதி புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,” மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை என்றால், நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யகூடாது என 14வது நிதி கமிஷன் சட்டத்தில் எதுவும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. இதில் வருடத்திற்கு ரூ.4ஆயிரம் கோடி தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி நிலுவையில் உள்ளது.

எனவே, தெரு விளக்கு, சுகாதாரம் உட்பட அனைத்து அத்தியாவசியங்களும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்பு நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபன்னா மற்றும் ராமசுப்ரமணியன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அதில் உள்ள சாராம்சங்கள் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உத்தரவில்,”தமிழக உள்ளாட்சி அமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை தற்போது இங்கு விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை. அதனால் நீதிமன்றம் இதுகுறித்த கோரிக்கையை நிராகரிக்கிறது. இதில் மனுதாரர் வேண்டுமானால் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கேட்கலாம் என அறிவுறுத்தி உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை நேற்று முடித்து வைத்தனர்.

Related Stories: