எளிமையாக நடந்தது மாமன்னன் ராஜராஜசோழன் 1035வது சதய விழா

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழனின் 1035வது சதய விழா நேற்று எளிய முறையில் கொண்டாடப்பட்டது. காலை 6 மணிக்கு பெரிய கோயிலில் மங்கள இசை முழங்க விழா தொடங்கியது. கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோயிலின் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணம் பாடினர். கோயில் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், சதய விழாக்குழு தலைவர் துரை.

திருஞானம், அரண்மனை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, தருமபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முதன்முதலாக கருவறையில் ஓதுவார்கள் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடினர். இதுவரை சமஸ்கிருதத்தில் மட்டுமே கருவறையில் பாடல்கள் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 மங்கள பொருட்களால் பேராபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

Related Stories: