ஒரு மணி நேரம் போதும்; ரிசல்ட் வந்துடும் நோயாளியை நெருங்காமல் ஸ்கேன் எடுக்க புது வசதி

* பாதுகாப்பான ‘கவச அறை’யில் ஸ்கேன் கருவி

* ஊழியர்கள் வெளியில் இருந்தே இயக்க முடியும்

மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க, பிரத்யேக கவச அறையுடன் கூடிய ஸ்கேன் மையம் மும்பையில் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யலாம். நோயாளிகளை நெருங்காமல் இந்த மையத்தில் ஸ்கேன் எடுக்க முடியும். நாட்டிலேயே முதன் முதலாக மும்பையில் இத்தகைய சிறப்பு வசதி வர உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி–்களுக்கு, சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதன்மூலம் நோயின் தீவிரம், இதயத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது போன்றவை நுட்பமாக அளவிட முடிகிறது. இதன் அடிப்படையில்தான், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை வழங்குகின்றனர்.

25 சதவீதத்துக்கு கீழ் தொற்று பரவல் இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. எளிதாக காப்பாற்றி விடலாம். ஆனால், 50 சதவீதம் அல்லது 75 சதவீதத்துக்கு மேல் நுரையீரலில் தொற்றுப் பரவியிருந்தால் ரொம்பவும் ரிஸ்க்தான். டாக்டர் டீம் 24 மணி நேரமும் கண்காணித்தால்தான் சாத்தியம். இதற்கெல்லாம் சிடி ஸ்கேன்தான் வரப்பிரசாதம் போல உதவுகிறது.ஆனால், சிடி ஸ்கேன் எடுக்க வரும் கொரோனா நோயாளிகளை ஸ்கேன் எடுக்கும் ஊழியர்கள், சற்று அருகிலேயே நிற்க வேண்டியுள்ளது. கவச உடை அணிந்திருந்தாலும், அவர்களுக்கும் ரிஸ்க்தான். இதற்கெல்லாம் முடிவு கட்ட புது முறை மும்பையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

நோயாளியை ஊழியர்கள் நெருங்காமலேயே ஸ்கேன் எடுக்க முடியும். நாட்டிலேயே இப்படி ஒரு ஸ்கேன் மையம் முதன் முதலாக மும்பையில்தான் உருவாக்கப்படுகிறது. அதுபற்றிய விவரம் இதோ: பாதுகாப்பான ‘கவச அறை’ இதற்காக பாதுகாப்பான கவச அறை ஒன்று ஸ்கேனின் மையத்தில் உருவாக்கப்படும். இது 11 அடி உயரம், 9.5 அடி அகலம், 40 அடி நீளம் கொண்டதாக இருக்கும். இதற்குள் ஸ்கேன் கருவி மற்றும் அது தொடர்பான சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

* இந்த அறையில் நோயாளி சென்று, கருவியில் படுத்துக் கொண்டதும், வெளியில் இருந்தே கருவியை இயக்கி தேவையான ஸ்கேன்களை சுலபமாக எடுத்து முடித்து விடலாம்.

* இந்த கவச அறைக்கு வெளியேதான் ஸ்கேன் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்கள் ரிமோட் மூலம் கருவியை இயக்குவார்கள். எனவே, அவர்களுக்கும் தொற்று பரவிவிடும் என்ற அச்சம் தேவையில்லை.

* கவச அறைக்கு உள்ளே உள்ள காற்று சுழற்சி முறையில் வெளியேற்றப்பட்டு, விரைவாக காற்றழுத்தம் சரி செய்யப்பட்டு விடும்.

* நோயாளியை ஸ்கேன் செய்து முடித்ததும், அல்ட்ரா வயலட் எனப்படும் புற ஊதா கதிர் விளக்குகள் மூலம் கிருமிகள் கொல்லப்பட்டு விடும்.

* கவசஅறைக்கு வெளியே அதை ஒட்டியபடி நின்றிருப்பவர்களை கூட கதிர் வீச்சு தாக்காது.

* நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்படுவதால், இங்கு கொரோனா நோயாளிகள் கட்டணம் இன்றி ஸ்கே் எடுத்துக் கொள்ளலாம் என மும்பை பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் கமிஷனர் ஆர்.ஏ.ராஜீவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: