வசிஷ்ட நதியை ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆத்தூர்: சேலம் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள தலைவாசல் ஊராட்சி பகுதியில் உள்ள வசிஷ்ட நதியின் குறுக்கே, பாலம் அமைத்து அந்த வழியாக மக்கள் நெடுஞ்சாலையை அடைந்து வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த பாலத்தையொட்டி கிராமத்தின் இருபுறங்களையும் இணைக்கும் சர்வீஸ் சாலை முழுமையாக அமைக்காமல் இருபுறமும் வசிஷ்ட நதிக்கரை வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தலைவாசலின் ஒருபுறத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் வசிஷ்ட நதியின் குறுக்கே பாதை அமைத்து அதனை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், தொடர் மழையால், வசிஷ்ட நதியின் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அமைத்த பாதை, தண்ணீரில் முழ்கி உள்ளது. இதனால், வசிஷ்ட நதியில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் மூழ்கியவாறு, ஆபத்து பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, தலைவாசல் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சர்வீஸ் சாலையை முழுமையாக அமைக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறையினரிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தலைவாசலில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது, வசிஷ்ட நதியின் குறுக்கே இருந்த பாலத்தையொட்டி சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

ஆனால், இதுநாள் வரை சர்வீஸ் சாலை முழுமையாக அமைக்கவில்லை. தலைவாசல் இருபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருபுறத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திர பதிவு அலுவலம் வங்கிகள் என முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் அமைந்துள்ளன. மேலும், பெரம்பலூர், வீரகனூர் செல்ல வேண்டிய வாகனங்கள், சர்வீஸ் சாலை இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்று தான் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், வசிஷ்ட நதியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அந்த பாதையில் ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே, உடனடியாக சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இதன்மூலம் தலைவாசல் ஊராட்சி மக்களின் வளர்ச்சியும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: