புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி கடைகள் மீண்டும் நேருவீதிக்கு இடமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் போக்குவரத்து தொடங்கியதையடுத்து அங்கிருந்த காய்கறி மார்க்கெட் மீண்டும் நேருவீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இயங்கிய காய்கறி மார்க்கெட் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தற்காலிகமாக புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பஸ்களை இயக்க முடிவெடுத்த நிலையில் காய்கறி மார்க்கெட் நேருவீதிக்கு இடம்மாறியது. அதன்பிறகும் பிரச்னை எழுந்ததால் மீண்டும் பஸ் நிலையத்திலேயே இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதுவையில் பிஆர்டிசி பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்களும் இயங்கத் தொடங்கி உள்ளன.

பஸ்களின் எண்ணிக்கை 30க்கும் அதிகமாக அதிகரித்துள்ள நிலையில் பஸ் நிலையத்தின் வெளியே வண்டிகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பொதுமக்கள் அவ்வழியாக தங்களது வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்து அபாயம் நிலவியது. இதையடுத்து பஸ் நிலையத்தில் இயங்கிய தற்காலிக காய்கறி மார்க்கெட்டை மீண்டும் பெரிய மார்க்கெட்டிற்கு 3 நாளில் இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்பேரில் தற்போது, காய்கறி மார்க்கெட்டிற்காக போடப்பட்டிருந்த மேற்கூரை ஷெட்டுகளை பிரிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றன. மேலும் அங்குள்ள ஷாமியானா பந்தல், தடுப்புகள், காய்கறி கடைகளை அகற்றும் பணியில் காய்கறி வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

60 பெரிய கடைகள், 150 அடிகாசு கடைகள் உள்பட மொத்தம் 210 கடைகள் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டன. பின்னர் நகராட்சியால் அங்கு தூய்மை பணிகள் நடக்கிறது. அதன்பிறகு 27ம்தேதி முதல் அனைத்து பஸ்களும் புதுச்சேரி புதிய பஸ் நிலையத்திற்குள் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் வந்து பயணிகளை சிரமமின்றி ஏற்றிச் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி காய்கறி மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது, கொரோனா ஊரடங்கில் பெருமளவு தளர்வு அளிக்கப்பட்டு பெரிய மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. பண்டிகை காலம் என்பதால் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. எனவே பஸ் நிலையத்தை காலி செய்ய வேண்டி இருப்பதால் நாங்கள் மீண்டும் பழைய இடத்திற்கே திரும்புகிறோம் என்றனர்.

Related Stories: