தனித்தேர்வாணையம் இல்லை; நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மையில் புதுச்சேரி முதலிடம்

புதுச்சேரியில் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.  வேலைவாய்ப்பின்மையில் நாட்டிலேயே  புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு என தனியாக பணியாளர் தேர்வு ஆணையம் இல்லை. இங்குள்ள குரூப்-ஏ போன்ற உயர் பதவிக்கான பணியிடங்கள்  மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.

புதுவையை பொறுத்தவரை முக்கியமான 38 அரசுத்துறைகள் உள்ளன. இத்துறைகளுக்கான உயர் பதவிகள் போக மீதியுள்ள இடங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று, நிர்வாக சீர்த்திருத்தத்துறை மூலம் நிரப்பப்படுன்றன. மொத்தம் 37,929 இடங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.  பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர், விரிவுரையாளர், ஊழியர் என 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக பொதுப்பணித்துறையில் 1,100, சுகாதாரத்துறையில் 600, மின்துறையில் 400, உயர்கல்வித்துறையில் 200 என ஒவ்வொரு துறையிலும் உள்ள காலி இட பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சி சரிவு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஆனால், புதுச்சேரியை பொறுத்தவரை நிதி பற்றாக்குறையால் பல துறைகளில் புதிதாக  ஆட்களை வேலைக்கு எடுக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக கிடக்கிறது. இதன் காரணமாக வேலைவாய்ப்பின்மையில் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக அண்மையில் வெளியான சர்வே முடிவில், புதுவை 75.8 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்திருந்தது.

அடுத்தபடியாக தமிழகம் (49.8 சதவீதம்), ஜார்க்கண்ட் (47.1 சதவீதம்), பீகார் (46.6 சதவீதம்), ஹரியானா (43.2 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3, 4 5 இடங்களை பிடித்துள்ளன.

 புதுவையில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல், விவசாயம், சட்டம், பி.எட்., கேட்டரிங், கலை மற்றும் அறிவியல் என மொத்தம் 145 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு பணி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

 இருப்பினும், பல இளைஞர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போட்டித்தேர்வுக்கு படிக்கின்றனர். இந்நிலையில், புதுவை அரசு காலியிடங்களை காலத்தோடு நிரப்புவதில்லை. எப்போதாவது அத்திப்பூத்தாற் போல காவலர், செவிலியர் உள்ளிட்ட சில பணியிடங்களை நிரப்புவதற்குதான் அறிவிப்பு வெளியிடுகிறது. அப்போது வயது வரம்பு காரணமாக இளைஞர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது.

 அரசு பணிதான் இல்லை. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லலாம் என்றால், அங்கு உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. அதையும் சமாளித்து சென்றால் உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.  பலர் குடும்ப கஷ்டத்தின் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலையில் சொற்ப ஊதியத்துக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால் இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், பலர் வேலையில்லாத விரக்தியில் தவறான பாதைக்கு செல்கின்றனர். இதனால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எந்த வேலைவாய்ப்பும் இல்லாத நிலையில் ரவுடிகள் குரூப்பில் சேர்ந்து வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர். குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டு 24 கொலைகள் அரங்கேறியுள்ளன. மேலும், 18 கொலை முயற்சிகளும், 19 கொள்ளை சம்பவங்களும், 194 பைக் திருட்டுகளும், 29 செயின் பறிப்பு சம்பவங்களும்,

191 இதர திருட்டு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். இந்தாண்டும் தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கிடையே அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பஞ்சாலைகள் நிர்வாக சீர்க்கேடு, தொடர் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு வருகின்றன. பாப்ஸ்கோ, பாசிகதர் கிராம வாரியம், ரேஷன் கடை, அங்கன்வாடி ஆகிய இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல மாதங்களாக சம்பளமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பம் வீதிக்கு வந்துள்ளன.  இதே நிலை தொடர்ந்தால் கூலிக்கு கொலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும். எனவே, புதுவை அரசு தொலைநோக்கு பார்வையிட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். காலியான பணியிடங்களை காலத்தோடு நிரப்ப வேண்டும். நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவனங்கள், பஞ்சாலைகளை நவீனமயமாக்கி மீண்டும் லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

அத்துக்கூலிகளாக மாறும் பட்டதாரிகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் கூறுகையில், `ஏற்கனவே ஆட்சியில் இருந்த என்ஆர் காங்கிரசும், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரசும் இளைஞர் நலக்கொள்கையை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்படாத ஒரு அலுவலகமாக உள்ளது. அங்கு கல்வி சான்றிதழ்களை பதிவு செய்வது ஒரு சம்பிரதாயமாகவே நடந்து வருகிறது. அரசின் தவறான கொள்கையால் பட்டதாரி இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அத்துக்கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர். ஏஎப்டி, சுதேதி, பாரதி ஆகிய 3 பஞ்சாலைகளை நவீனப்படுத்தி இயக்கினால் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை தர முடியும். ஆனால், பஞ்சாலைகளை மூடிவிட்டனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்கக் முடியும். வேலை இருந்தால் குடும்பம் உண்டு, வேலை உண்டு என்று இருப்பார்கள். வேலையில்லாத காரணத்தினால் தவறான எண்ணம் தோன்றி தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒருபுறம் சமூக குற்றங்கள் அதிகரிக்கிறது. மற்றொருபுறம் வேலையில்லா விரக்தியில் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கின்றனர், என்றார்.

Related Stories: