கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என அதிமுக முன்மொழிந்துள்ளதை பாஜ வழிமொழியும்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சென்னை: அதிமுக தலைலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். நாங்கள் முன்மொழிந்துள்ளதை பாஜ  சீக்கிரமே வழிமொழியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம்  கூறியதாவது: உள் ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில்தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து நல்ல டாக்டராக உருவெடுக்க முடியும்.  அதற்காக முதல்வர் உத்தரவின்பேரில் ஒரு தனி மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பரிசீலனையில் உள்ளது 3  அல்லது 4 வாரங்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று கவர்னரே சொல்லியிருக்கிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் ஒரு அரசியல் போராட்டம் நடத்துகிறார்.

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் திருமாவளவன் பேசிய கருத்துகள் கடும் கண்டனத்துக்குரியது. ஒட்டு மொத்த மக்களும் கண்டிக்க வேண்டிய  விஷயம் இது.  மனுதர்மம் என்பது ஒருவர் எழுதியது தான். ஒருவர் எழுதிய தகவல்களை வைத்து எது வேண்டுமானாலும் பேசலாமா? இது  ஒட்டுமொத்தத்தில் பெண்ணினத்தையே கொச்சைபடுத்தும் விஷயம். இதை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர் பதவி தேவையில்லை  என்பது அண்ணாவின் கருத்து. அது முடிந்து போன விஷயம். கவர்னர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர். எங்களை பொறுத்தவரை கவர்னர் தேவையா?  தேவையில்லையா? என்ற விமர்சனத்துக்கே நாங்கள் செல்லவில்லை. நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறோம்.

அதற்கு மரியாதையும் கொடுக்கிறோம். 7 பேர் விடுதலை விவகாரத்தில் தொடர்ந்து கவர்னருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அதேபோல 7.5  சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தகவல் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொரோனா  தடுப்பூசி வழங்குவதும் அரசின் கடமை தான். இது தேர்தல் வாக்குறுதியாக சொல்லவில்லை. எனவே கமல்ஹாசன் பார்வையில் வேறுபாடு இருந்தால்  நாம் என்ன செய்ய முடியும்? அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணி என்றால் பாஜவும்  தான் இருக்கிறது. நாங்கள் முன்மொழிந்துள்ளோம். பாஜ சீக்கிரமே வழிமொழியும். அதற்கான காலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: