விலை கிடுகிடு உயர்வால் மீண்டும் அமல் வெங்காயம் இருப்பு வைக்க டிச.31 வரை கட்டுப்பாடு: மத்திய அரசு திடீர் உத்தரவு

புதுடெல்லி: விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், வெங்காயம் இருப்பு வைக்க மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு விதித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சில்லரை வியாபாரிகள் 2 டன் வரையிலும், மொத்த வியாபாரிகள் 25 டன் வரையிலும் மட்டும் வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம். மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்துக்கு முன்பு வரை கிலோ ₹30 முதல் ₹50 வரை விற்று வந்த வெங்காயம் தற்போது சில்லரை விற்பனையில் ₹100 முதல் ₹120 வரை விற்கப்படுகிறது.தட்டுப்பாட்டை காரணமாக காட்டி வெங்காயம் பதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

 இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, இவற்றை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இதன்படி சில்லரை விற்பனையாளர்கள் 2 டன்கள் வரையிலும், மொத்த விற்பனையாளர்கள் 25 டன்கள் வரையிலும் மட்டுமே வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம்’’ என்றார். கடந்த செப்டம்பர் 15ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பருப்பு வகைகள், தானியங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் வராது. யாரும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதுகுறித்து குறிப்பிட்ட லீனா நந்தன், ‘‘அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டத்தின்படி, அசாதாரணமான சூழ்நிலைகளில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பயன்படுத்தி, இருப்பு கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றார். வெங்காயம் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு 3வது நடவடிக்கையை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

‘‘பதுக்கலைத் தடுத்து வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த கண்காணித்து உரிய  நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும்  மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மத்திய அரசு, தன்னிடம் உள்ள வெங்காயம் இருப்பில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப வெங்காயம் அனுப்பி வருகிறது. இதுவரை 35,000 மெட்ரிக் டன் வெங்காயம் சப்ளை செய்யப்பட்டுள்ளது’’ என லீனா நந்தன் தெரிவித்தார்.

Related Stories: