1389 பயோமெட்ரிக் இயந்திரம் வந்தாலும் மதுரையில் பழைய முறைப்படிதான் ரேஷன் பொருட்கள் விநியோகம்

மதுரை: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் கார்டுதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். இத்திட்டம் கடந்த 1ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. சர்வர் பிரச்னை காரணமாக இத்திட்டம் தமிழகத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டம் கடந்த 15ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் அமலுக்கு வரும் என அரசு அறிவித்தது. இதனால், கடைகளுக்கு முழுமையான பொருட்கள் ஒதுக்கீடு செய்யாமல், 25 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனால் பொருட்கள் கேட்டு பொதுமக்கள் பலர் கடைக்கு சென்று கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். தற்போது இத்திட்டம் இல்லையென பழைய நடைமுறை என தெரிவிக்கப்பட்டதால், இனிமேல்தான் மீதியுள்ள ஒதுக்கீடு பொருட்கள் கடைகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

மேலும் இத்திட்டத்தால், தற்போதைய நிலையில் ஒரு கடையில் ரேஷன் பொருட்கள் வாங்குவோர், பக்கத்து கடையில் சென்று பொருள் வாங்க முடியாது. இந்த பயோமெட்ரிக் இயந்திரத்தில், முதலில் வார்டு வாரியாக இணைக்க வேண்டும். பின்பு மாவட்டம், அதன் பின் வெளிமாநிலம் என்ற அளவில் விபரங்கள் இணைக்கப்படும். அதன்பின்புதான், எங்கு வேண்டுமானாலும் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலை உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 9.30 லட்சம் ரேஷன்கார்டுகள் உள்ளன. 1389 ரேஷன் கடைகளுக்கு பயோமெட்ரிக் இயந்திரம் வந்துள்ளது. இவற்றை மதுரையில் 11 தாலுகாவிலுள்ள தாசில்தார்களிடம் நேற்று கலெக்டர் வினய் வழங்கினார்.

அப்போது டிஎஸ்ஓ முருகேஸ்வரி கூறுகையில், ‘மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பயோமெட்ரிக் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கார்டு ஸ்கேன் செய்யப்படும். அப்போது, குடும்ப உறுப்பினர் பெயர் விபரம் தெரியும். அதில் குடும்பத்தில் உள்ள நபர் தனது கைரேகையை பதிவு செய்து, அவர் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

உடல்நலக்குறைவாக யாரேனும் வரமுடியவில்லை. அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். கடவுச்சொல் மூலம், தனியாக பதிவேடு தயாரித்து அதன்மூலம் பொருட்கள் சப்ளை செய்யப்படும். வடமாநிலத்தவர்கள் இங்கு அவர்கள் தங்களது முகவரியை மாற்றத்தேவையில்லை. அதே முகவரியில் கார்டுக்கு கிலோ அரிசி ரூ.3, கோதுமை ரூ.2 என்ற விலையில் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

தற்போது, சர்வர் பிரச்னையால் பயோமெட்ரிக் முறை தற்காலிக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அரசின் மறு உத்தரவு வந்த பிறகு பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும். அதுவரை பழைய முறைப்படியே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டார்.

Related Stories: