கொரோனாவால் பயணிகள் அச்சம் ஆயுதபூஜையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 20% மட்டுமே முன்பதிவு- உரிமையாளர்கள் புலம்பல்

சேலம் : ஆயுதபூஜையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 20 சதவீதம் பேர் மட்டும் முன்பதிவு செய்துள்ளதாக பஸ் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக ரயில், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம், ஆம்னி பஸ் உள்ளிட்டவைகளில் பயணம் செய்து தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். நடப்பாண்டு கொரோனா காரணமாக ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது. ஆறரை மாதத்திற்கு பிறகு கடந்த 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆயுதபூஜைக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே ஆம்னி பஸ்களில் முன்பதிவு நடக்கும். நடப்பாண்டு கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் அரசு, தனியார் பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதேபோல் ஆம்னி பஸ்களிலும் எதிர்பார்த்த பயணிகள் கூட்டம் வரவில்லை. இதனால் ஆம்னி பஸ்களுக்கு வழக்கமாக வரும் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு ஆயுதபூஜை வரும் 25ம் தேதியும், விஜயதசமி 26ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. 24ம் தேதி சனிக்கிழமை வருவதால், அதிகம் பேர் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக எதிர்பார்த்த அளவில் முன்பதிவு நடக்கவில்லை என்று உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 2500 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகையின் போதுதான் ஆம்னி பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே முன்பதிவு நடக்கும்.

ஆயுதபூஜைக்கு முதல் நாள் அனைத்து ஆம்னி பஸ்களிலும் பயணிகள் கூட்டம் முழுமையாக இருக்கும். அதேபோல் பண்டிகை முடிந்து தாங்கள் பணி செய்யும் இடத்திற்கு திரும்பும்போது ஆம்னி பஸ்களில் கூட்டம் முழுமையாக காணப்படும். நடப்பாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆறு மாதத்திற்கு பின்பு கடந்த 16ம் தேதி முதல் ஆம்னிபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சத்தால் கடந்த ஒன்றரை வாரமாக ஆம்னி பஸ்களில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லை. சொற்ப பயணிகளை வைத்தே ஆம்னி பஸ்களை இயக்கி வருகின்றனர். அதுவும் 500 பஸ்கள் மட்டுமே இயங்குகிறது. தமிழகம் முழுவதும் 2500 ஆம்னி பஸ்கள் இயங்கினால், ஒரு பஸ்சுக்கு 36 சீட் என்றால் 90 ஆயிரம் சீட் நிரம்பும். ஆனால் நடப்பாண்டு நேற்று வரை 3 ஆயிரம் சீட்டுக்கு மட்டுமே முன்பதிவு நடந்துள்ளது. இன்று (23ம் தேதி) மற்றும் 24ம் தேதிகளில் முன்பதிவு நடந்ததால் கூட அதிகபட்சமாக 20 சதவீத சீட் நிரம்பும். நடப்பாண்டு கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் பள்ளி மாணவ, மாணவிகள் அவரவர் சொந்த ஊரில் உள்ளனர்.

அதேபோல் வெளியூர்களில் வேலை செய்த 50 சதவீதம் பேர் இன்னும் வேலை இல்லாமல் அவரவர் சொந்த ஊரிலேயே உள்ளனர். இதன் காரணமாக நடப்பாண்டு ஆயுதபூஜையில் ஆம்னி பஸ்களில் பயணிகள் வருகை இல்லாமல் போனது. இதனால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: