பாசிகள் படர்ந்ததால் நீரோட்டம் பாதிப்பு-கருகும் நெற்பயிர்களை பாதுகாக்க கால்வாயை தூர்வாரிய விவசாயிகள்

வீரவநல்லூர்: கன்னடியன் கால்வாயில் படர்ந்துள்ள பாசிகளை அகற்ற அதிகாரிகள் முன்வராததால், கருகும் நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகளே கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகாவின் பிரதான கால்வாயான கன்னடியன் கால்வாய் கல்லிடைக்குறிச்சியில் துவங்கி கோபாலசமுத்திரத்தை அடுத்த கொத்தன்குளத்தில் தாமிரபரணியில் கலக்கிறது. இக்கால்வாய் மூலம் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நேரிடையாகவும் நூற்றுக்கணக்கான ஏக்கர் மறைமுகமாகவும் பயன் பெறுகிறது.

இக்கால்வாயில் கார் சாகுபடிக்கு ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்படும். கடந்த 4 ஆண்டுகளாக முறையாக தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டும் ஜூன் மாதம் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து ஆக.5ம்தேதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் சாகுபடிக்கு தயாரான நிலையில்  10வது நாட்களில் தண்ணீர் அடைக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டதை அடுத்து 10 நாட்கள் கழித்து தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் முழு மூச்சுடன் பணிகளை துவங்கினர்.

தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயில் படர்ந்திருக்கும் பாசிகளை அப்புறப்படுத்துவதற்காக 4 நாட்கள் தண்ணீர் அடைக்கப்படுவதாக அறிவித்தனர். அக்.12ல் கால்வாயில் தண்ணீர் அடைக்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் கால்வாயில் பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் வெள்ளாங்குளி அருகே மடைகளை பழுது பார்ப்பதாக கூறி வேண்டுமென்றே காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் சேரன்மகாதேவி, பத்தமடை பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விவசாயிகள் மீண்டும் போராடி தண்ணீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. கால்வாயில் 400 கன அடி தண்ணீர் திறந்தால் மட்டுமே கடைமடை வரை தடையின்றி செல்லும்.

தற்போது பாதியளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் கால்வாயில் பாசிகள், அமலைச்செடிகள் படர்ந்துள்ளதாலும் நீரோட்டம் தடைப்பட்டது.

இனி அதிகாரிகளை நம்பி பலனில்லை எனக்கருதிய விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் நேற்று வெள்ளாங்குளி முதல் காருகுறிச்சி குளம் வரை கால்வாயில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு துவங்கி மதியம் வரை தூர்வாரினர்.

ஏமாற்றத்திற்கு பதில் தருவோம்

கன்னடியன் கால்வாயில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கூறுகையில், தொடர்ந்து 4 வருடமாக வஞ்சிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் போராடி தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொந்தளித்தனர். இந்த கொந்தளிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெரியும் என விவசாயிகள் கூறினர். மேலும் நெல்பயிர் விளைய 90 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் சாகுபடிக்காக 60 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் எனக்கூறுவது ஏமாற்று வேலையாக தெரிகிறது என ஆதங்கப்பட்டனர்.

Related Stories: