பெண் ஊழியரை ஆபாசமாக பேசிய மாநகராட்சி அதிகாரி மீது 2 பிரிவுகளில் வழக்கு

திருவொற்றியூர்: பெண் ஊழியரை ஆபாசமாக பேசியமாநகராட்சி அதிகாரி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவொற்றியூர் மண்டலத்தில் நிரந்தரம், ஒப்பந்த ஊழியர்கள், தன்னார்வலர் அமைப்பை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் எண்ணூரில் உள்ள 1வது வார்டில் பணிபுரியும் தூய்மை அலுவலர் பாபுவை செல்போனில் தொடர்புகொண்ட உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உடன் பணிபுரியும் பெண் ஊழியருடன் இணைத்து ஆபாசமாக பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுபற்றி பாபு மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இதனிடையே, பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை மற்றும் ஆபாசமாக பேசும் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கத்தினர் எண்ணூர் காவல் நிலையம் மற்றும் மண்டல உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி பாக்கியம் தலைமையில் பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலை திருவொற்றியூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதை தொடர்ந்து, பெண் ஊழியரை ஆபாசமாக பேசியது உள்பட 2 பிரிவுகளில் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மீது எண்ணூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகராட்சி உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: