சாலையில் நடந்து செல்பவர்களிடம் பறித்த செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை மாற்றி வெளிமாநிலங்களில் விற்ற 9 பேர் கைது: 100 செல்போன், 80 ஆயிரம் பறிமுதல்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், குற்றவாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஜூலியட் ஜீசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த பாலமுருகன் (40), வியாசர்பாடி அண்ணாசாலையை சேர்ந்த சதீஷ் (40), அலி (38), கமலுதீன் (எ) மங்கா (35), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த மருது (49),  அந்தோணிசாமி (48), மண்ணடியை சேர்ந்த சந்துரு (34), புகழேந்தி (36)  ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

நேற்று முன்தினம் அவர்களை பிடித்து விசாரித்தபோது, வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் செல்போன்களை திருடி, பர்மா பஜாரில் உள்ள கடைகளில் 2000 முதல் 3000 ரூபாய் வரை விற்றது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 50 செல்போன், 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த திருட்டு செல்போன்களை வாங்கி, அதன் ஐஎம்இஐ எண்ணை மாற்றி, புதிய போன்கள் போல் கேரளா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு விற்பனை செய்த பர்மா பஜாரில் கடை நடத்தி வரும் குலாமை (40) போலீசார் கைது செய்தனர்.  

இவர்களிடமிருந்து 50 செல்போன்கள், 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

Related Stories: