நாகர்கோவிலில் கஞ்சா ஆயில் விற்பனை செய்த மாஜி எம்எல்ஏ பேரன் உட்பட 3 பேர் கைது: வாங்க வந்த 5 பேரும் சிக்கினர்

நாகர்கோவில்:நாகர்கோவிலில் வடசேரி, ஒழுகினசேரி, கோட்டாறு ரயில் நிலையம் பகுதிகள் உள்பட  நகரின் பிரதான பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்நிலையில் வடசேரி  பகுதியில்,  3 இளைஞர்கள் வித்தியாசமான முறையில் நேற்று புகை பிடித்ததை கண்ட  தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள்  புகைத்தது கஞ்சா ஆயில் எனக்கூறினர்.  எண்ணெய் போன்று  காணப்படும் கஞ்சா ஆயிலை பேப்பரில்  தடவி புகைக்கின்றனர். பெங்களூரில்  இருந்து வாங்கி வரப்பட்ட இந்த கஞ்சா ஆயில் 50 கிராம்  20 ஆயிரம் முதல்  30 ஆயிரம் விலையில் கிடைக்கிறது. இங்கு அதனை ₹ 40 ஆயிரம்  முதல்   50 ஆயிரம் விலையில் விற்பனை செய்கின்றனர்.

இதுதொடர்பாக தனிப்படை  போலீசார் கோட்டாறு, வடிவீசுவரம், பார்வதிபுரம், ஆலம்பாறை ஆகிய பகுதிகளை  சேர்ந்த 8 பேரை சுற்றிவளைத்தனர். இதில் குலசேகரம்  அய்கோடு பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (29), அருமனை மூட்டோடு பகுதியை  சேர்ந்த அனிஸ் (26), நாகர்கோவில் வாத்தியார்விளை பிரவின் (26) ஆகிய 3 பேரை  வடசேரி போலீசார் கைது செய்தனர். இதில் கோகுலகிருஷ்ணன் முன்னாள் எம்எல்ஏவின்  பேரன் ஆவார். இவர்களிடம் இருந்து 50 கிராம் எடையுள்ள 2 பாட்டில் மற்றும்  30 கிராம் கொண்ட ஒரு பாட்டில் கஞ்சா ஆயில், சிரிஞ், 103 ஓசிபி விர்ஜின் வேபர் பேப்பர் மற்றும் இதனை விற்பனை செய்ய பயன்படுத்திய சொகுசு கார் ஆகியன  பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 5 பேர் கஞ்சா ஆயில் வாங்க வந்ததாக கைது செய்யப்பட்டனர்.

Related Stories: